வாணாபுரம் அருகே செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை


வாணாபுரம் அருகே செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2020 8:45 AM IST (Updated: 2 Oct 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும் நாதஸ்ஸ்ரீ (வயது 14), பிரித்தி (13), பத்மஸ்ரீ (11) ஆகிய 3 மகள்களும், யோகேஸ்வரன் (9) என்ற மகனும் உள்ளனர். நாதஸ்ஸ்ரீ அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் பிரித்தி, பத்மஸ்ரீ, யோகேஸ்வரனும் படித்து வருகின்றனர்.

நாதஸ்ஸ்ரீ கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பொறுமையாக வாங்கித் தருகிறேன் என்று கூறி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பார்த்து வா என்று அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற நாதஸ்ஸ்ரீ தனக்கு செல்போன் வாங்கி கொடுக்காத விரக்தியில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாதஸ்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story