திருவாரூர் அருகே 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின வேளாண்துறை இணை இயக்குனர் ஆய்வு


திருவாரூர் அருகே 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின வேளாண்துறை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2020 9:52 AM IST (Updated: 2 Oct 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண்துறை இணை இயக்குனர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடி 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுள்ளது. தற்போது பயிர்கள் அறுடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையினால் திருவாரூர் அருகே இலவங்கார்குடி பகுதியில் அறுவடைக்கு தயாரான 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்த பகுதிக்கு பாசனம் பெறும் ராஜன் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதேபோல் சம்பா நாற்றாங்கால் தண்ணீரில் மூழ்கியதால் செய்து அறியாமல் விவசாயிகள் திகைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஸ்டாலின் கூறுகையில்,

எங்கள் பகுதிக்கு ஓடம்போக்கியாற்றில் இருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வருகிறோம். தற்போது குறுவை பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மழை பெய்ததால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியாமல் உள்ளது.

இந்த ராஜன் வாய்க்கால் தண்ணீர் அதிகரிக்கும் போது காட்டூர் பகுதியில் உள்ள கண்டியமதகு மூலம் மீண்டும் ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் வடிகின்ற வகையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த மதகு நீண்டகாலமாக பழுதடைந்துள்ளது. இதில் உள்ள 3 தடுப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த தடுப்பினை திறக்கவோ, மூடவோ முடியாத நிலை உள்ளது.

இதனால் இப்பகுதியில் மழை நீரை வடிய வைக்க முடியாமல் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் தண்ணீர் வடிய வாய்ப்பு இன்றி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த மதகினை உடனே சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹெப்சி ஹேமா நிர்மலா மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகளிடம் காண்பித்து பாதிப்பு குறித்து விளக்கி கூறினர்.

பின்னர் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்போம். இந்த பகுதி மதகு பழுதடைந்துள்ளதை சீரமைத்திடவும், வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குடவாசல் பகுதியில் சம்பா நெல் சாகுபடி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது சம்பா நடவு பணிகள் எந்திரம் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிறுகளத்தூர், சேங்காலிபுரம், வடவேர், பருத்தியூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர் வாராத வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி, விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் பெரும் பாதிப்பு ஏற்படாதபடி விவசாயிகளுக்கு உதவிட அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story