கற்பழிப்பு நடந்ததாக கூறப்படும் தேதியில் அனுராக் காஷ்யப் இலங்கையில் இருந்தார்; போலீசாரிடம் ஆவணங்கள் சமர்ப்பிப்பு


கற்பழிப்பு நடந்ததாக கூறப்படும் தேதியில் அனுராக் காஷ்யப் இலங்கையில் இருந்தார்; போலீசாரிடம் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2020 5:30 AM IST (Updated: 3 Oct 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு நடந்ததாக கூறப்படும் தேதியில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இலங்கையில் இருந்தார் என்பதற்கான ஆவணங்கள் போலீசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்தார்.

மும்பை,

இந்தியில் ‘பிளாக் பிரைடே’, ‘தி லன்ச் பாக்ஸ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகை பாயல்கோஷ், அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இது குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த 2013-ம் ஆண்டு படவாய்ப்பு கேட்டு இயக்குனரின் வீட்டுக்கு சென்றபோது, அவர் தன்னை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக நடிகை கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் அனுராக் காஷ்யப்பை போலீசார் விரைவில் கைது செய்யவேண்டும் என பாயல் கோஷ் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து முறையிட்டார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார்.

இது குறித்து அவரது வக்கீல் கூறுகையில், ‘காஷ்யப் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார். அது தொடர்பாக போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்து உள்ளார்.

இதேபோல கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில் காஷ்யப் இந்தியாவிலேயே இல்லை. அவர் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கையில் இருந்தார். இது தொடர்பான ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்து உள்ளார், என்றார்.

Next Story