அரசு மருத்துவமனை டாக்டர், நர்சுகளை தாக்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு மருத்துவ ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


அரசு மருத்துவமனை டாக்டர், நர்சுகளை தாக்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு மருத்துவ ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2020 7:11 AM IST (Updated: 3 Oct 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை தாக்கியதாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2-வது நாளாக நேற்று மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம்(வயது 45). இவரது தந்தை பக்கிரிசாமி(80). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 21-ந் தேதி முதல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். உரிய சிகிச்சை அளிக்காததால் தான் பக்கிரிசாமி இறந்து விட்டதாக கூறி அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த பெண் டாக்டர், நர்சுகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை செல்போனில் வீடியோ படம் எடுத்த நர்சு உமா என்பவரையும் தாக்கி செல்போனை பறித்துச் சென்றதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அலுவலகம் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தெரியவந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதன்பின் மருத்துவமனை ஊழியர்கள் சார்பில் பெரியகடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் மீது (143) கும்பலாக கூடுதல், (294) அசிங்கமாக திட்டுதல், (332) பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல், (506)மிரட்டல் விடுத்தல், (356) செல்போனை பறித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், அவரது உறவினர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக பணிகளை புறக்கணித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் வழக்கம் போல் பணிகள் நடந்தன. மற்ற ஊழியர்கள் டாக்டர், நர்சுகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி அலுவலம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தெரியவந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்ய வேண்டும். டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களை பாதுகாப்பதற்கான புதிய சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதி சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று எச்சரித்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனைக்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை ஊழியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்பட்டன. சிகிச்சைக்கு வந்து இருந்த நோயாளிகளும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story