6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது பயணிகள் மகிழ்ச்சி


6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2020 8:01 AM IST (Updated: 3 Oct 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் நேற்று புறப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை,

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து முடங்கியது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த மாதத்தில் இருந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சில சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி நெல்லை வழியாக கன்னியாகுமரி-சென்னை சிறப்பு ரெயில் மற்றும் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் ஆகியவை இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதற்காக 2 மணி நேரத்துக்கு முன்பாகவே பயணிகள் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

ரெயில் நிலைய நுழைவு வாசலில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு காய்ச்சல் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் வாசலில் அமர்ந்து, பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்து பயணம் செய்வோரை மட்டும் ரெயில் நிலைய பிளாட்பாரத்துக்கு செல்ல அனுமதி அளித்தனர். அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வரிசையாக சென்று, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் ஏறி இருக்கைகளில் அமர்ந்தனர். 6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்பட்டதால், ரெயில் பயணிகள் சங்க தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர், பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

இதுகுறித்து நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த கட்டாரங்குளத்தை சேர்ந்த கிளாடி என்பவர் கூறுகையில், “நான் சென்னையில் பணிபுரிந்து வருகிறேன். கொரோனா பரவலையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தேன். தற்போது மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதால் முன்பதிவு செய்தவுடன் டிக்கெட் கிடைத்தது. எனவே சென்னைக்கு புறப்பட்டு செல்கிறேன். ரெயில் போக்குவரத்தை அனுமதித்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர் கூறுகையில், “நான் காற்றாலை ஒப்பந்தப் பணி செய்து வருகிறேன். அடிக்கடி ரெயிலில் சென்னைக்கு சென்று வருவேன். கடந்த 6 மாதங்களாக ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்ததால் பயணம் செய்ய முடியவில்லை. தற்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில், அதுவும் தினசரி ரெயிலாக இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்“ என்றார்.

Next Story