ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மக்களுக்கு எதிரானது; நாட்டிற்கு ஆபத்தானது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி


ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மக்களுக்கு எதிரானது; நாட்டிற்கு ஆபத்தானது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2020 10:40 AM IST (Updated: 3 Oct 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மக்களுக்கு எதிரானது, நாட்டுக்கு ஆபத்தானது என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தி.மு.க. சார்பில் தொகுதிக்குட்பட்ட வண்டறந்தாங்கல் கிராமத்தில் மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் என அரசு அறிவித்தது. அதற்குரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்யப்பட்ட நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இக்கூட்டங்களில் தி.மு.க. சார்பில் எல்லோரும் கலந்துகொண்டு மத்திய அரசுகொண்டு வந்துள்ள வேளாண் சட்டதிருத்த மசோதாக்களை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வர தி.மு.க. வலியுறுத்திய நிலையில் அரசு கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது கொரோனா பரவுலுக்காக ரத்து செய்யப்பட்டதல்ல.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் போன்றவற்றை அரசு கொண்டு வந்துள்ளது மக்களுக்கு எதிரானது. நாட்டிற்கு ஆபத்தானது. தமிழகத்தில் முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்துவிட்டது. இதனால் தமிழக அரசின் கோப்புகளை இனி அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிடுவார்கள். முட்டுக்கட்டை ஏற்படும்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சீட்டுகள் பத்தவில்லை என வெளியேறுவார்கள். அங்கே உள்ள சிலரும் தி.மு.க. கூட்டணிக்கு வருவார்கள். இது சகஜம் தான். கூட்டணியில் மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஆர்பாட்டம் நடத்தியதற்கே தி.மு.க.வினர் மீது ஆளுங்கட்சி வழக்கு போட்டுவிட்டது. பெரிய ஆளான ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்து உத்தரபிரதேச அரசு கைது செய்தது ஆச்சர்யபடுவதற்கில்லை. தி.மு.க. மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தி.மு.க. சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் மக்கள் சபை கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட 50 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story