ராயனூரில் புதுப்பிக்கப்படும் போர் நினைவுச் சின்னம்


ராயனூரில் புதுப்பிக்கப்படும் போர் நினைவுச் சின்னம்
x
தினத்தந்தி 3 Oct 2020 11:21 AM IST (Updated: 3 Oct 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

ராயனூரில் உள்ள போர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்படுகிறது.

கரூர்,

கரூர் மாவட்டம், பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதாகும். கி.பி. 1-ம் நூற்றாண்டில் சேர மன்னர்கள் கருவூரை(தற்போதைய கரூர்) ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் கோட்டை கருவூரில் ஆன்பொருறை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. கரூர் நகரில் கோட்டை மேடு என்ற இடம் அமைந்துள்ளமையும், அங்குள்ள கோவில், கோட்டைக் கோவில் என்றழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாடு தொல்லியல் துறை கரூர் நகரிலும், ஆன்பொருறை (அமராவதி) ஆற்றங்கரையிலும் மேற்கொண்ட அகழாய்வில் கோட்டைச் சுவர் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அக்கோட்டைச்சுவர் செங்கற்கள் கருவூர் சேரர் அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கருவூரிலிருந்த அக்கோட்டை கி.பி.18-ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தாராபுரத்தில் ஆட்சி செய்த மேஜர் மேக்லியட் என்ற ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக கருவூர் விளங்கியது. ஆங்கிலேயக் குதிரைப் படையொன்று கருவூர் கோட்டையை காவல் புரிந்தது. கி.பி. 1780 முதல் 1784 வரை நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக கருவூரிலும் போர் நடைபெற்றது. கி.பி.1783-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்த கருவூர் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர் கருவூர் மீது போர் தொடுத்தனர்.

இந்தப்போரின் இறுதியில் கருவூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அப்போரில் படைப்பிரிவு தலைவர் ஒருவரும், 19 ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டதாகவும், 30 போர் வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கருவூர் கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் வகையிலும், இறந்து போன போர் வீரர்களின் நினைவாகவும் தாந்தோன்றிமலைக்கு அருகில் ராயனூரில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க போர் நினைவுத்தூண் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தினை எழிலார்ந்த தோற்றத்துடன் புனரமைக்கப்பதுடன், இதன் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலான தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகளும் இடம்பெறவுள்ளது. மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Next Story