தா.பேட்டை அருகே ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்


தா.பேட்டை அருகே ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Oct 2020 11:31 AM IST (Updated: 3 Oct 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே அஞ்சலம் ஊராட்சித்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தா.பேட்டை,

தலைமலை அடிவாரத்தில் அஞ்சலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் தலைமலை பெருமாள் கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த பேனர்களை சேதப்படுத்தியும், அங்கிருந்த அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் ஊராட்சி தலைவர் துரைராஜ், இந்து முன்னணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மீது வழக்குபதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை தா.பேட்டை போலீசார் ஊராட்சி தலைவர் துரைராஜை கைது செய்தனர். அவரை சந்திக்க சென்றபோது இந்து முன்னணி நிர்வாகிகள் கண்ணன், பிரேம்குமார், பொதுமக்கள் மனோகரன், விஸ்வநாதன், தியாகராஜன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த அஞ்சலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நீலியாம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திடலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து ஊராட்சிதலைவர் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு வந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தன், தாசில்தார் சந்திரதேவநாதன் உள்ளிட்ட பலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுகலைந்து சென்றனர்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பெண்களுக்கு சாமிஅருள்வந்து வாக்குகூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி தலைவரின் குழந்தைகள் இருவர் திடீரென மயங்கியதால் அருகில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து குடிநீர் வழங்கினர். மேலும் அங்கு மண்எண்ணெய் கேனுடன் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பொதுமக்களுடன் இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Next Story