தடையை மீறி ஊராட்சி கூட்டம்: கனிமொழி எம்.பி. உள்பட 300 பேர் மீது வழக்கு
தடையை மீறி ஊராட்சி கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி. உள்பட 300 பேர் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தட்டார்மடம்,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே அரசூர் பஞ்சாயத்து இடைச்சிவிளையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை மீறி, ஊராட்சி கூட்டம் நடத்தியதாக, கனிமொழி எம்.பி., தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அரசூர் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலமுருகன் உள்பட 300 பேர் மீது தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்தார்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 269 (தொற்றுநோய் தடுப்பு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story