முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து “மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 7-ந்தேதி முடிவு இருக்கும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து “மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 7-ந்தேதி முடிவு இருக்கும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2020 3:45 AM IST (Updated: 4 Oct 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

“முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 7-ந் தேதி முடிவு இருக்கும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னும் 10 நாட்களுக்குள் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மக்கள் பல தலைமுறைகளாக எதிர்பார்த்த, காலத்துக்கும் பேசக்கூடிய பல அறிவிப்புகள் வர உள்ளன. மேலும் கோவில்பட்டியில் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், ரூ.1½ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காணொலிகாட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்து கொடுத்த பாதையில் அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் உள்ளது. உலகிலேயே ஒரு அரசியல் கட்சி பிரிந்த பின்னர் ஒன்றுகூடி, இழந்த சின்னத்தையும், கொடியையும் மீட்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு. எனவே, அ.தி.மு.க. பிரிந்து விடும், கொடி, சின்னம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையாக நினைத்தாலும் கூட ஏமாற்றம்தான் மிஞ்சும்.

ஜனநாயக ரீதியான இயக்கத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுவது இயற்கைதான். ஆனால் தி.மு.க.வைப்போல் பெயரளவுக்கு காணொலி காட்சி மூலமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, அவர்களாக தீர்மானத்தை நிறைவேற்றும் கட்சி அ.தி.மு.க. அல்ல.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஜனநாயக ரீதியாக 4 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு, சரியான முடிவு எட்டப்பட்டுள்ளது. வரும் 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்பட உள்ளார். அதன் முடிவு மக்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, செயற்குழுவில் எதை வலியுறுத்தினார்களோ அந்த முடிவுகள் இருக்கும்.

அ.தி.மு.க.வில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. கட்டுக்கோப்பாக ஒரே கொடி, ஒரே சின்னம் என்ற வகையில், அனைத்து தொண்டர்களின் அரவணைப்போடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, வருகிற சட்டசபை தேர்தலை சந்திப்போம். இதில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவில்பட்டி மந்திதோப்பு நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, தேர் பவனியை தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story