வள்ளியூர் அருகே, ரூ.3 கோடியில் துலுக்கர்பட்டி-மாவடி இடையே புதிய பாலம் கட்டும் பணி - இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி-மாவடி இடையே புதிய இணைப்பு பாலம் கட்டும் பணியினை ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை நேரில் ஆய்வு செய்தார்.
வள்ளியூர்,
ராதாபுரம் தொகுதி வள்ளியூர் அருகிலுள்ள கிராமம் துலுக்கர்பட்டி. இந்த கிராமத்திற்கும், அருகிலுள்ள நாங்குநேரி தாலுகா மாவடி கிராமத்திற்கும் இடையே நம்பியாறு ஓடுகிறது. இந்த இரண்டு கிராம மக்களும், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர்களும் மழைக் காலங்களில் நம்பியாற்றை கடக்க வழியில்லாமல் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்லவேண்டிய நிலையால் பல ஆண்டு காலமாக அவதி அடைந்து வந்தனர்.
இந்த இரண்டு கிராமங்களையும் இணைக்கும் வகையில் நம்பியாற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடமும் தேர்தல் காலங்களில் தங்களிடம் வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களிடமும் இருகிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது இப்பகுதிக்கு பிரசாரம் செய்ய வந்த இன்பதுரையிடம் துலுக்கர்பட்டி கிராம மக்கள் நம்பியாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இந்த பாலத்தை அமைத்து தருவதாக இன்பதுரை தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரையின் தொடர் முயற்சியால் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி துலுக்கர்பட்டி-மாவடி இடையே நம்பியாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டுவதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இங்கு பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஜூன் மாதம் இன்பதுரை எம்.எல்.ஏ தலைமையில் பூமி பூஜையுடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் பாலம் அமைக்கும் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பாலம் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு இன்பதுரை எம்.எல்.ஏ. நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் நாங்குநேரி தாலுகா வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story