போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? அரசு பகிரங்கப்படுத்த குமாரசாமி வலியுறுத்தல்


போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? அரசு பகிரங்கப்படுத்த குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2020 10:15 PM GMT (Updated: 3 Oct 2020 9:00 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? என்பதை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு, 

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயிடம் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். இதற்கிடையில், நடிகை அனுஸ்ரீக்கு போலீசார் சம்மன் அனுப்பிய பின்பு, அவர் சில அரசியல் தலைவர்களின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் முதல்-மந்திரி ஒருவர், அவரது மகன் அனுஸ்ரீயை போதைப்பொருள் விவகாரத்தில் இருந்து காப்பாற்ற முயன்றதாகவும், இதற்காக மங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தொடர்புகொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் யார் அந்த முன்னாள் முதல்-மந்திரி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியான குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போதைப்பொருள் விவகாரத்தில் தினம், தினம் ஒவ்வொருவரின் பெயர் வெளியே வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு மாதிரியான செய்திகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக வெளியே வந்த வண்ணம் இருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முன்னாள் முதல்-மந்திரியும், அவரது மகனும் முயன்றதாகவும், இதற்காக போலீசாரிடம் பேசியதாகவும் செய்திகள் வந்துள்ளன. மாநிலத்தில் நான் உள்பட 6 பேர் முன்னாள் முதல்-மந்திரியாக இருக்கிறோம். எனக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

சித்தராமையாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். சதானந்தகவுடாவுக்கும் ஒரு மகன் உள்ளார். ஆனால் 6 முன்னாள் முதல்-மந்திரிகளில், நானும், சித்தராமையாவும் தான் துடிப்புடன் உள்ளோம். எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி தங்களது வேலையை பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா மந்திரிகளாக உள்ளனர். எனவே 6 பேரில் அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? என்று மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் மக்களிடையே முன்னாள் முதல்-மந்திரிகள் பற்றி தவறான தகவல்களை சொல்லக்கூடாது. நான் ஒரு முன்னாள் முதல்-மந்திரி என்பதால், எனக்கும் சில பொறுப்புகள், கடமைகள் உள்ளது.

எனவே நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற அந்த முன்னாள் முதல்-மந்திரி யார்? என்பதை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். மாநில மக்களுக்கு அது யார்? என்பது தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் குறித்து விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம், முன்னாள் முதல்-மந்திரி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினால், இந்த வழக்கில் அடுத்தகட்டமாக போலீசார் எப்படி விசாரணையை நடத்துவார்கள். இந்த வழக்கையே கிடப்பில் போட வேண்டிய நிலை ஏற்படும்.

அதனால் தான் அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற அந்த முன்னாள் முதல்-மந்திரி யார்? என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். போதைப்பொருள் விவகாரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. மங்களூரு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தான் தொலைக்காட்சி நிருபருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். அந்த இன்ஸ்பெக்டர் பணி மாற்றம் செய்யப்பட்டு, அவரது பணி இடமாற்றத்தை அரசு ரத்து செய்துள்ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரத்தில் நடிகைகளை கைது செய்து விசாரிப்பதுடன், போதைப்பொருள் விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள், தொழில்அதிபர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.

அப்போது தான் வழக்கு முடிவுக்கு வரும். நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்றவர்கள் யார்? அதுபற்றி விசாரணை நடைபெற வேண்டும். இந்த விவகாரத்தை நான் சும்மா விடபோவதில்லை. அதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story