ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.கே.ரவியின் மனைவியை வேட்பாளராக நிறுத்த முடிவு எடுக்கவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி
ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.கே.ரவியின் மனைவியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெலகாவியில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
பெலகாவி,
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் மற்றும் சிரா தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த 2 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ராமலிங்க ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் அளிக்கும் சிபாரிசின் பேரில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நான், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வேட்பாளர்களை இறுதி செய்து கட்சி மேலிடத்தின் அனுமதியை பெற்று அறிவிப்போம்.
ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவியை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால் டி.கே.ரவியின் மனைவி தான் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. டி.கே.ரவியின் மனைவி உள்பட இன்னும் பலர் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
ஆர்.ஆர்.நகர் தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முனிரத்னா பா.ஜனதாவுக்கு சென்றதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அவர் மீண்டும் காங்கிரசில் சேர விரும்பினால் முறைப்படி கட்சியில் சேர்வது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு கட்சியில் அவரை சேர்ப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்.
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகளிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சில நடிகைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகைகள் மட்டும் தான் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்களா? என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story