கண்ணாடியால் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை; ஒரு தலை காதலால் விபரீதம்


கண்ணாடியால் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை; ஒரு தலை காதலால் விபரீதம்
x
தினத்தந்தி 4 Oct 2020 5:33 AM IST (Updated: 4 Oct 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஒரு தலை காதல் காரணமாக கல்லூரி மாணவியை குடும்பத்துடன் உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர், அது முடியாததால் கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், அன்பு நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டில் தங்கி இருந்த ஜீவானந்தம்(வயது 22) என்பவர் தனது கழுத்தை கண்ணாடியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தங்களையும் குடும்பத்துடன் உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றதாகவும் வளசரவாக்கம் போலீசாருக்கு முத்துகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இறந்து கிடந்த ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், வேளாண் துறை சார்ந்த படிப்பு படித்து முடித்து உள்ளார். முத்துகிருஷ்ணனின் 21 வயதான மகளும் வேளாண்துறை சார்ந்த படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த கல்லூரி விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் சந்தித்து உள்ளனர்.

அதன்பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் முத்துகிருஷ்ணனின் மகளை ஜீவானந்தம் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீவானந்தத்தின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியை அம்மா, அப்பா என அழைத்து வந்தார். இதனால் அவர்களும் ஜீவானந்தத்தை தங்கள் மகனை போல் கருதினர். இதனால் அவ்வப்போது சென்னைக்கு வரும் ஜீவானந்தம், முத்துகிருஷ்ணன் வீட்டிலேயே தங்கி சென்று உள்ளார்.

ஜீவானந்தத்தின் தாய் வருமான வரித்துறையில் பணிபுரிந்து இறந்து போனதால் அவரது வேலையை வாரிசுதாரரான ஜீவானந்தத்திற்கு கொடுக்க சான்றிதழ்கள் சரிபார்க்க கடந்த மாதம் 29-ந் தேதி மீண்டும் சென்னைக்கு வந்த அவர் முத்துகிருஷ்ணன் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று அதிகாலையில் வீட்டில் உள்ள அறையில் மனைவி, மகளுடன் முத்துகிருஷ்ணன் தூங்கி கொண்டிருந்தார். ஹாலில் படுத்து இருந்த ஜீவானந்தம் திடீரென சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை படுக்கை அறைக்கு தூக்கிச்சென்று முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்வதற்காக கியாசை திறந்து பற்ற வைத்தார்.

பக்கென சத்தம் வந்ததால் திடுக்கிட்டு எழுந்த முத்துகிருஷ்ணன், சிலிண்டருடன் தனது மகளை நோக்கி ஜீவானந்தம் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஜீவானந்தத்தை அறையில் இருந்து பிடித்து வெளியே தள்ளி விட்டார். இதனால் அவரது மகளும், மனைவியும் விழித்துக்கொண்டனர்.

அப்போது ஜீவானந்தம், முத்துகிருஷ்ணனின் மகளை பார்த்து, நீ வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. நானும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். உன்னை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வாக்குவாதம் செய்தார். பின்னர் திடீரென வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்த ஜீவானந்தம், கண்ணாடி துண்டால் தனது கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டார். கியாஸ் சிலிண்டரில் கியாஸ் குறைந்த அளவே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இதில் முத்துகிருஷ்ணன் மகள், மனைவி இருவரின் தலைமுடிகள் லேசாக கருகியது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை அவரது குடும்பத்துடன் உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற வாலிபர், அது முடியாததால் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story