திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - பொதுமக்கள் குளிக்க தடை


திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - பொதுமக்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 4 Oct 2020 8:31 AM IST (Updated: 4 Oct 2020 8:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை பின்பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. ஏலகிரிமலையில் பெய்யும் தொடர் மழையால் அங்குள்ள அத்தனாவூர் ஏரி நிரம்பி அந்த தண்ணீர் மலைப்பகுதி வழியாக வந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைவாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதில் பொதுமக்கள் குளித்து வந்தனர்,

தற்போது திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக நீர்வீழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளதால் கூட்டமாக மக்கள் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக வனத்துறை மற்றும் போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர்கள் கூறுகையில், நீர்வீழ்ச்சி அருகே முருகன் கோவில் உள்ளது. இதன் காரணமாக கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக கூறிவிட்டு அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிக்கின்றனர். தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் நீர்வீழ்ச்சிக்கு மேலே சென்றால் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Next Story