இணையவழி திருட்டு சம்பவங்களை தவிர்க்க கணினிக்கு அங்கீகாரம் பெற்ற ‘ஆன்டி வைரஸ்’ பயன்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


இணையவழி திருட்டு சம்பவங்களை தவிர்க்க கணினிக்கு அங்கீகாரம் பெற்ற ‘ஆன்டி வைரஸ்’ பயன்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 4 Oct 2020 10:09 AM IST (Updated: 4 Oct 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

இணையவழி திருட்டு சம்பவங்களை தடுக்க கணினிக்கு அங்கீகாரம் பெற்ற ஆன்டி வைரஸ் பயன்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக சுபநிகழ்ச்சிகளுக்கான தொழில் செய்ய செல்லாமல் தனது வீட்டில் கணினியை வைத்து போட்டோ எடிட்டிங் வேலை செய்து வந்து உள்ளார்.

கடந்த 29-ந் தேதி மாலை சுமார் 7.30 மணியளவில் அவரது கணினி திரையில் ‘ரீட் மீ டெக்ஸ்ட்’ என்ற தகவல் வந்தது. இதையடுத்து தான் அவருக்கு தனது கணினி மர்மநபர்களால் ‘ஹேக்’ (ஊடுருவல்) செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த கணினியை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதன் இயக்கத்தை முடக்கி கணினியில் இருந்த டேட்டாக்களை திருடியுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட சுப நிகழ்ச்சி ஆர்டர் போட்டோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இந்த இணைய வழி திருட்டு கும்பல் திருடப்பட்ட டேட்டாக்களை திரும்ப வழங்க டாலரில் பணம் கேட்டு உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பெற்று கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஹேக்கர்ஸ் மூலம் திருடப்படும் தகவல்களை திரும்ப பெறுவது என்பது எளிதல்ல. செல்போனுக்கும், இணைதள முகவரிக்கும் வரும் தேவையற்ற குறுஞ்செய்திகள் மற்றும் இணைய வழி இணைப்புகள் (லிங்க்) ஆகியவற்றை திறந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றின் மூலமே பெரும்பாலும் ஹேக்கர்ஸ் நமது செல்போன் மற்றும் கணினியில் ஊடுருவுகின்றனர்.

இதனை தவிர்க்க கணினி அங்கீகாரம் பெற்ற ஓ.எஸ். பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அங்கீகாரம் பெற்ற ‘ஆன்டி வைரஸ்’ பயன்படுத்த வேண்டும். போலியான ஆன்டி வைரஸ் மற்றும் ஓ.எஸ். பயன்படுத்துவதே இதுபோன்ற இணைய வழி திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உடனிருந்தார்.

Next Story