சிவகாசி ஒன்றியத்தில் சத்துணவு பணிக்கு பெண்கள் ஆர்வம் - 20 இடங்களுக்கு 1,078 பேர் விண்ணப்பம்
சிவகாசி ஒன்றியத்தில் சத்துணவு பணிக்கு பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 20 இடங்களுக்கு 1,078 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
சிவகாசி,
தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. சிவகாசி ஒன்றியத்தில் மட்டும் 11 அமைப்பாளர்கள் பணியிடமும், 9 சமையலர் பணியிடமும் காலியாக உள்ளது.
இந்த பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் இதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு தகுதியான பெண்களிடம் இருந்து கடந்த சில நாட்களாக மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
அமைப்பாளர் பணிக்கு பொது மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், பழங்குடியினர் 8-ம் வகுப்பு படித்து இருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் ஆதிதிராவிடர் 21 வயது முதல் 40 வயது உள்ளானவர்களாகவும், பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயதுக்கு உள்ளானவர்களாக இருக்க வேண்டும்.
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயதுக்கு உள்ளானவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 21 வயது முதல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும். அனுமதிக்கப்படும் பணியிடங்களை 25 சதவீத பணியிடங்கள் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்காக நிரப்பப்படும். அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்பட மாட்டாது.
சமையலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். பழங்குடியின பிரிவினர் எழுத, படிக்க தெரிந்து இருந்தால் போதும். வயது வரம்பை பொறுத்தமட்டில் சத்துணவு அமைப்பாளரின் விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள 20 பணியிடங்களுக்கு தினமும் குறைந்தது 30 பெண்கள் தங்களது விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் பெண்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பல பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் விண்ணப்பிக்க வந்து இருந்தனர்.
விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை அதற்கான சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அனைத்து ஜெராக்ஸ் கடைகளிலும், பெண்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பலர் வெளியில் இருந்த நபர்களிடம் விண்ணப்பங்களை பணம் கொடுத்து பூர்த்தி செய்தனர். நேற்று மதியம் 3 மணி வரை 11 அமைப்பாளர் பணியிடங்களுக்கு 882 பெண்களும், 9 சமையலர் பணிக்கு 196 பெண்களும் மனு கொடுத்து இருந்தனர். மொத்தம் உள்ள 20 சத்துணவு பணியிடங்களுக்கு 1,078 பேர் மனு செய்து இருந்தனர்.
சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க வந்த ஒரு பெண்ணிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, நான் சமையலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு வேறு வேலை தெரியாது.
இந்த வேலை கிடைத்தால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எனது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்பேன். மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் தேர்வு நடத்தி தகுதி உள்ளவர்களுக்கு வேலைகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் மனு செய்துள்ளேன். நேர்முக தேர்வுக்கு அழைத்தால் வந்து கலந்து கொண்டு அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு உரிய பதில் அளிப்பேன். அரசு வேலையை பெறுவேன் என்றார்.
Related Tags :
Next Story