வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு அலுவலர்கள் விடுமுறையில் செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்


வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு அலுவலர்கள் விடுமுறையில் செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Oct 2020 3:30 PM IST (Updated: 4 Oct 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு அலுவலர்கள் விடுமுறையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலருமான மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருமான மகேசன் காசிராஜன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதா மணி, வேளாண் துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பேரிடர் காலங்களில் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.எனவே அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் அரசு அலுவலர்கள் விடுமுறையில் செல்வதை தவிர்க்க வேண்டும்.கண்காணிப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

கண்மாய்கள் உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்தால் அவர்களை தடுக்க தேவையான மணல் மூடைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் பத்திரமாக தங்குவதற்கு தேவையான இடங்களை முன்கூட்டியே தயார்செய்து இருக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story