மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் சத்துணவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
சத்துணவு பணியாளர் காலியிட பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்ததால் மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் பட்டதாரி முதல் பொறியாளர் வரை ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 184 சத்துணவு அமைப்பாளர் பணிக்கும், 442 உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த பணிக்கான விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். மானாமதுரை ஒன்றிய பகுதியில் மொத்தம் 49 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வந்து விண்ணப்பித்துள்ளனர். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் சத்துணவு உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து மானாமதுரை யூனியன் அலுவலகத்திற்கு கொடுக்க நேற்று கடைசி நாளாக இருந்ததால் ஏராளமானோர் குவிந்தனர். இதில் பெரும்பாலும் பெண்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். மேலும் இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் முதல் பொறியியல் படித்த பெண்கள் வரை அதிகம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று இவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
இதுகுறித்து விண்ணப்பித்தவர்கள் தரப்பில் கூறியதாவது:- தற்போது ஏராளமானோர் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்பின்றி வீடுகளில் இருந்து வருகின்றனர். அரசு வேலை என்றதும் அதற்கான கல்வித்தகுதியை மட்டும் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சாதாரண பணிகளுக்கு அரசு அறிவித்த கல்வித்தகுதியை விட பட்டம் படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் ஏராளமானோர் வந்து விண்ணப்பித்துள்ளதால் இதில் உண்மையான தகுதி உள்ள நபர்களுக்கு அந்த வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் நிலை உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் கல்வித்தகுதிக்கு ஏற்ற நபர்களிடம் மட்டும் தான் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற படிப்புகளுக்கு அந்தந்த பணிகளுக்கு தகுந்த வகையில் பணியில் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story