பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் கோளாறு; ரெயில் போக்குவரத்து நிறுத்தம் - மண்டபத்தில் இருந்து ரெயில்கள் சென்றன


பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் கோளாறு; ரெயில் போக்குவரத்து நிறுத்தம் - மண்டபத்தில் இருந்து ரெயில்கள் சென்றன
x
தினத்தந்தி 4 Oct 2020 4:15 PM IST (Updated: 4 Oct 2020 4:11 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் கோளாறால் பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்துள்ளது. பழமையான ரெயில் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும் ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தூக்குப்பாலத்தை சுற்றி 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.ஐ.டி. மூலம் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில்கள் செல்லும்போது தூக்குப்பாலத்தில் ஏற்படக்கூடிய செயல்பாடுகள் அனைத்தும் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு ஐ.ஐ.டி. குழுவினரும் ரெயில்வே அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகளில் நேற்று மாலை திடீரென சத்தம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தனர். இரவு நேரமானதால் தூக்குபாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஐ.ஐ.டி. குழுவினர் வந்தபிறகே தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு 8.25 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படக்கூடிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் இல்லாமல் வெறும் பெட்டிகளுடன் ரெயில் தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் ரெயில்வே நிலையம் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் இருந்து பயணிகள் அரசு பஸ்கள் மூலமாக மண்டபம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐ.ஐ.டி குழுவினர் மற்றும் ரெயில்வே பொறியாளர்கள், அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர். பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னரே பயணிகளுடன் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தான் பயணிகளுடன் பாம்பன் ரெயில்வே பாலம் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பயணிகளுடன் பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட மேலாளர் லெனின் கூறியதாவது:-

பாம்பன்பாலத்தில் ரெயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. பொதுவாக மெக்கானிக்கல் எந்திரங்கள் நீண்டநாட்கள் செயல்படாமல் இருந்தால் சில பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல, பாம்பன் பாலத்தில் பாதுகாப்புக்காக அதிநவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பாலத்தில் ஏதேனும் சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால் எச்சரிக்கை மணி ஒலிப்பதுடன் பாலத்தில் ரெயில்களை இயக்கமுடியாது. மேலும், இதுகுறித்த தகவல் ரெயில்வே என்ஜினீயர்களுக்கு கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று அந்த பாதையில் சென்னைக்கு ரெயில் இயக்க முற்பட்ட போது, சென்சார் கருவிகள் எச்சரிக்கை ஒலி எழுப்பின. இந்த ஒலியானது பலத்த காற்று வீசினாலும் ஏற்படக்கூடியது. எனவே, நாளை(இன்று) காலை என்ஜினீயர்கள் பாலத்தை ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வின்முடிவில் என்ன பிரச்சினை என்பது தெரியவரும். பயணிகளின் பாதுகாப்புக்காக நேற்று பயணிகள் இல்லாமல் ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story