குன்னத்தூர் சத்திரம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
குன்னத்தூர் சத்திரம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்தில் விற்பனை அங்காடிகள் கட்டப்பட்டு வருகிறது. அதனை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புதுமண்டபத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் புதினங்களை பாதுகாக்கும் வகையில் அங்குள்ள கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்படுகிறது. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்று சின்னங்களை மட்டும் பாதுகாக்க மதுரை மாவட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.977 கோடி மதிப்பீட்டில் 8 பணிகள் நடந்து வருகிறது. அதில் ஒரு பணியாக புதுமண்டபத்தில் உள்ள தையல் கடைகள், புத்தக கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றுவதற்காக ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மூன்று தளங்களாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திற்கும் கடைகள் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 190 கடைகளும், 90 டெய்லரிங் கடைகளும் அமைக்கப்பட உள்ளது. குன்னத்தூர் சத்திர நிர்வாகத்தினரின் அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தமிழக அரசு சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3 ஆயிரத்து 496 கோடியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 1 கோடியே 30 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 3 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் வந்து உள்ளனர். உள்நாட்டு பயணிகள் வருவதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. வெளிநாட்டு பயணிகள் வருகையின் மூலம் அன்னிய செலாவணி கிடைக்கிறது.
கொரோனா காலத்தில் வெளியூர் பணியாளர்கள் சென்ற காரணத்தினால் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குன்னத்தூர் சத்திரத்தில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த முடியாத காரணத்தினால் அருகில் உள்ள பல்லடுக்கு வாகன காப்பகத்தில் போதுமான வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் காலம் என்பதால் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி விமர்சனம் செய்கிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story