கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் புத்துயிர் பெற்று வரும் ரோஜா நாற்று தொழில் - மலர் செடி உற்பத்தி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ரோஜா நாற்று தொழில் புத்துயிர் பெற்று வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அகலகோட்டை, மேடுமுத்துகோட்டை, ஒசட்டி, பாலதொட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரோஜா நாற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா நாற்று செடிகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் உலகையே உலுக்கி அச்சுறுத்திய கொரோனா நோய் தாக்கத்தால் அகலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ரோஜா நாற்று செடிகள் உற்பத்தி செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரோஜா செடிகளை வியாபாரிகள் வாங்க வராததால் பல்லாயிரக்கணக்கான செடிகள் பராமரிக்க முடியாமல் குப்பைகளுக்கு சென்றது. இதனால் மலர் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களில் ஏராளமான விவசாயிகள் நர்சரி தொழிலை கைவிட்டு மாற்று தொழில்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து போக்குவரத்து தொடங்கி உள்ளதால் அகலகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோஜா நாற்று தொழில் புத்துயிர் பெற்று வருகிறது. இதனால் மலர் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் ரோஜா நாற்று செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செடிகளை வாங்க தற்போது அகலகோட்டை கிராமத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வரத்தொடங்கியுள்ளனர். சென்னை போன்ற நகர பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையை நேசிக்கும் வகையில் மாடித்தோட்டம், வீடுகளில் செடிகள் வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி வருவதால் அங்கு ரோஜா, ஜெர்பரா, உள்ளிட்ட கொய்மலர் செடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை போன்ற நகர பகுதிகளிலிருந்து அகலகோட்டை கிராமத்திற்கு செடிகள் வாங்க தினந்தோறும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story