குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுவதை கண்டித்து ஆவின் பால் பண்ணையை பொதுமக்கள் முற்றுகை - சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுவதை கண்டித்து ஆவின் பால் பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரமங்கலம்,
சேலம் இரும்பாலை ரோட்டில் தளவாய்பட்டி ஊராட்சியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையை சுற்றி உள்ள காத்தவராயன் கோவில் தெரு, சித்தனூர், ரொட்டி காரன் வட்டம், நாகர்கோவில் வட்டம், வண்டிக்காரன் வட்டம் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தளவாய்பட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் வழியாக வெளியேறி வருகிறது. அவ்வாறாக வெளியேறும் மழை நீருடன் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், வயல்வெளிகளிலும் சூழ்ந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக வயல்வெளிகளில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவின் பால் பண்ணையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், இதற்கு உரிய தீர்வு காண வேண்டியும் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆவின் பால் பண்ணைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நேரில் பார்வையிட வேண்டும் என போலீசாரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் போலீசார் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டனர். ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குடியிருப்பு பகுதிக்கு செல்லாத வகையில் மாற்று வழியாக கால்வாயில் கொண்டு செல்லப்படுவதற்கு தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story