விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: போலியாக பயனாளிகளை சேர்த்த 2 இ-சேவை மையங்களுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதில் போலியாக பயனாளிகளை சேர்த்த 2 இ-சேவை மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பேராவூரணி,
பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் இந்த திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. கிசான் திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் பலர் விண்ணப்பித்தனர். இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்றதாக புகார் எழுந்தது.
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளதா? என வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணை நடத்தினர். அதில் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் தகுதியற்ற நபர்களை எந்த ஆவணமும் இன்றி வேளாண் துறை அதிகாரிகளின் கடவு சொல்லை(பாஸ்வேர்டு) பயன்படுத்தி சில தனியார் கணினி மைய நிர்வாகிகள் பதிவு செய்து முறைகேடாக பணம் பெற்று அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முறைகேடாக பணம் பெற்ற நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் போலியான பயனாளிகளிடம் இருந்து பணம் வசூலித்து, போலியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட இ-சேவை மையங்கள் மீது வேளாண் துறை மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேராவூரணியில் செல்வராஜ் மகன் பிரபு என்பவர் நடத்தி வந்த இ-சேவை மையத்தை பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர், திருச்சிற்றம்பலத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவர், கிசான் திட்ட நிதி உதவி உள்ளிட்ட அரசு நிதி உதவி திட்டங்களை பெற்றுத் தருவதாக கூறி திருச்சிற்றம்பலம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கிழக்கு, திருச்சிற்றம்பலம் மேற்கு, செருவாவிடுதி தெற்கு, செருவாவிடுதி வடக்கு, மடத்திக்காடு, துறவிக்காடு, வாட்டாத்திக்கோட்டை, களத்தூர் கிழக்கு, களத்தூர் மேற்கு பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் முறையான ஆவணங்கள் பெறாமல் வீட்டு வரி ரசீது மட்டும் பெற்று ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் வசூல் செய்தது அதிகாரிகளின் கள ஆய்வில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலத்தில் இயங்கி வந்த செல்வத்துக்கு சொந்தமான இ-சேவை மையத்தை நேற்று மாலை பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா பூட்டி ‘சீல்’ வைத்தார்.
Related Tags :
Next Story