தஞ்சையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு: முககவசம் அணியாதவர்களை விரட்டிப்பிடித்து கொரோனா பரிசோதனை - பஸ்சில் சென்றவர்களையும் அதிகாரிகள் இறக்கியதால் பரபரப்பு


தஞ்சையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு: முககவசம் அணியாதவர்களை விரட்டிப்பிடித்து கொரோனா பரிசோதனை - பஸ்சில் சென்றவர்களையும் அதிகாரிகள் இறக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Oct 2020 8:44 PM IST (Updated: 4 Oct 2020 8:44 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முககவசம் அணியாதவர்களை விரட்டிப்பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பஸ்சில் சென்றவர்களையும் அதிகாரிகள் இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களாக தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க துண்டு பிரசுரங்கள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதனை ஏற்று பலர் முக கவசம் அணிந்து வந்தாலும், சிலர் முக கவசம் அணியாமலேயே வருகிறார்கள். கொரோனாவின் வீரியத்தை உணராமல் அவர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். முக கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு ஆரம்பத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அபராதம் விதித்தாலும் முக கவசம் அணியாமல் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிப்பதுடன், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கோவிந்தராவ், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி கடந்த 2 நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் தலைமையில் இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தஞ்சை சோழன் சிலை, ராமநாதன் மருத்துவமனை ரவுண்டானா, ரெயிலடி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

முக கவசம் அணியாமல் வந்த சிலர் அதிகாரிகளை பார்த்ததும், அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக வாகனத்தை வேகமாக இயக்கினர். இருப்பினும் போலீசார் உதவியுடன் அவர்களையும் அதிகாரிகள் விரட்டிப்பிடித்து அபராதம் விதித்தனர். சிலர் தப்பிச்சென்று விட்டனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக சோழன் சிலை பூங்கா வளாகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனமும் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இருந்து கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் டவுன் பஸ் வந்தது.

அந்த பஸ்சில் முக கவசம் அணியாமல் வந்த 2 பெண்களையும் அதிகாரிகள் இறக்கினர். பின்னர் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story