தேவநாதசுவாமி கோவில் அருகில் தடையை மீறி மொட்டையடித்த பக்தர்கள் விரட்டியடிப்பு - திருவந்திபுரத்தில் பரபரப்பு


தேவநாதசுவாமி கோவில் அருகில் தடையை மீறி மொட்டையடித்த பக்தர்கள் விரட்டியடிப்பு - திருவந்திபுரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Oct 2020 10:15 PM IST (Updated: 4 Oct 2020 10:02 PM IST)
t-max-icont-min-icon

திருவந்திபுரம் கெடிலம் ஆற்றங்கரையோரம் மொட்டையடித்த பக்தர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

நெல்லிக்குப்பம்,

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள்.

ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மொட்டை அடிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி கோவிலில் சாமிக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றங்கரையில் திரண்டனர். அங்கு தேவநாதசுவாமி கோவில் கோபுரத்தை நோக்கி அமர்ந்தபடி மொட்டையடித்தனர். அங்கு ஏராளமானோர் திரண்டதால் போலீசார் விரைந்து சென்று அவர்களை எச்சரித்தனர். மேலும் கலைந்து செல்லுமாறும் அறிவுரை கூறினர்.

ஆனால் பக்தர்கள் யாரும் கேட்கவில்லை. இதனால் போலீசார், பக்தர்களை விரட்டியடித்தனர். அப்போது ஒரு சில பக்தர்கள் பாதி மொட்டை அடித்திருந்த நிலையில் ஓடியதை காணமுடிந்தது. இதேபோல் பில்லாலி தொட்டியில் மொட்டையடித்த பக்தர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story