வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகள் சேலையை வீசி காப்பாற்றிய கணவன்- மனைவிக்கு பாராட்டு


வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகள் சேலையை வீசி காப்பாற்றிய கணவன்- மனைவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 4 Oct 2020 4:41 PM GMT (Updated: 4 Oct 2020 4:41 PM GMT)

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை சேலையை வீசி காப்பாற்றிய கணவன்- மனைவியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள போயாகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் கல்பனா (வயது 14). இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-பூங்கொடி தம்பதியரின் மகள் தீபிகா (வயது 13). இவர் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கல்பனாவும், தீபிகாவும் தோழிகள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணி அளவில் அருகில் உள்ள பெரிய வாய்க்காலுக்கு துணி துவைப்பதற்காக சென்றனர்.

வாய்க்காலில் தவறி விழுந்தார்

அப்போது தீபிகா கால் இடறி வாய்க்காலில் விழுந்தார். இதைப்பார்த்த கல்பனா, தோழியை காப்பாற்றுவதற்காக உடனே வாய்க்காலில் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கிய தீபிகாவை பிடித்து இழுக்க அவரை நோக்கி கையை நீட்டினார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது.

இதனால் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் சென்றனர்.

கணவன்-மனைவி காப்பாற்றினர்

அவர்களை கண்டதும் வாய்க்கால் கரையில் நின்று கொண்டிருந்த பெண்கள் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என கூக்குரலிட்டனர். உடனே ஸ்கூட்டரில் வந்த 2 பேரும் கூக்குரலிட்ட பெண்களின் அருகில் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 சிறுமிகள் வாய்க்காலி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை பார்த்தனர். இதனால் ஸ்கூட்டரில் வந்த பெண் சுதாரித்து கொண்டு தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து சிறுமிகளை நோக்கி வீசினார். உடனே அந்த சேலையை சிறுமிகளான தீபிகா மற்றும் கல்பனா ஆகியோர் கெட்டியாக பிடித்து கொண்டனர். இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் வாய்க்காலில் குதித்து நீந்தி, 2 சிறுமிகளையும் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றினார்.

இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது:-

கூத்தனூரை சேர்ந்தவர்கள்

என் பெயர் பாபு என்கிற பாலமுருகன் (வயது 47). நான் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பணிகளை எடுத்து செய்து வருகிறேன். என்னுடைய மனைவி கவிதா (41). நாங்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள கூத்தனூரில் வசித்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) சனிக்கிழமை என்பதால் நாங்கள் 2 பேரும் மில்மேடு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தோம்.

வாய்க்கால் மேடு அருகே சென்றபோது கரையில் நின்றிருந்த பெண்கள் சிலர், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டனர்.

உடனே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் 2 சிறுமிகள் வாய்க்காலில் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே நான் வாய்க்காலில் குதித்தேன். நீச்சல் அடித்தபடியே சிறுமிகளை நோக்கி சென்றேன்.

பாராட்டு

அதற்குள் எனது மனைவி சேலையை அவிழ்த்து சிறுமிகளை நோக்கி வீசினார். அந்த சேலையை ஒரு சிறுமி பிடிக்க, நான் நீந்தி சென்று அந்த சிறுமிகளை பிடித்துக்கொண்டேன். பின்னர் 2 பேரையும் இழுத்து சில நிமிடங்களில் கரைக்கு கொண்டு வந்து சேர்ந்தோம். தாமதித்திருந்தால் சிறுமிகள் வாய்க்கால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு இருப்பார்கள். தக்க சமயத்தில் 2 பேரையும் காப்பாற்றிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணவன்-மனைவி 2 பேரும் துணிச்சலாக செயல்பட்டு வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை காப்பாற்றியதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

Next Story