நாசிக்கில் ராணுவ பகுதிகளை படம் பிடித்து பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பிய வாலிபர் கைது


நாசிக்கில் ராணுவ பகுதிகளை படம் பிடித்து பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2020 2:47 AM IST (Updated: 5 Oct 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்கில் ராணுவ பகுதிகளை படம்பிடித்து பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் தேவ்லாலியில் இந்திய ராணுவ விமான பயிற்சி பள்ளி, பீரங்கி படைப்பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று தேவ்லாலி கேம்ப் பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியை வாலிபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் கவனித்தனர். உடனடியாக அவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழு

இதில், அந்த வாலிபர் நாசிக்கில் தடை செய்யப்பட்ட ராணுவ பகுதிகளை செல்போனில் படம் பிடித்து வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் அந்த படங்களை பாகிஸ்தானை சேர்ந்த வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதையடுத்து ராணுவ வீரர்கள் அந்த வாலிபரை தேவ்லாலி கேம்ப் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராணுவ பகுதிகளை பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிய வாலிபர் பீகார் மாநிலம் கோபல்கன்ஞ் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் குமார்(வயது21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நாசிக் தேவ்லாலி கேம்ப் ரெயில் நிலையம் அருகில் தங்கியிருந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story