கோவையில் சாதனைக்காக ஆணிகள் மீது நின்று பறை இசைத்த பட்டதாரி பெண்


கோவையில் சாதனைக்காக ஆணிகள் மீது நின்று பறை இசைத்த பட்டதாரி பெண்
x
தினத்தந்தி 5 Oct 2020 7:56 AM IST (Updated: 5 Oct 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பறை இசை கற்று சாதனை படைக்க ஆணிகள் மீது நின்று பறை இசைத்த பட்டதாரி பெண்.

கோவை,

கோவை தொண்டாமுத்தூர் பூலுவாம்பட்டியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 20). பட்டதாரி. இவர், கடந்த சில ஆண்டுகளாக பறை இசை கற்று வந்தார். அதில் சாதனை படைக்க விரும்பினார். இது பற்றி தனது குழுவினருடன் ஆலோசித்து, பலகையில் அடிக்கப்பட்ட ஆணிகள் மேல் நின்று பறையடிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று பீளமேடு காந்தி மாநகரில் உள்ள கலைக்கூடத்தில் காலை 10 மணி முதல் 11.45 மணி வரை இடைவிடாமல் பலகையில் அடிக்கப்பட்ட ஆணிகள் மேல் நின்று பறை அடித்தார். அதை வீடியோவாக பதிவு செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அருள்மொழி கூறுகையில், எனது தந்தை இறந்துவிட்டார். எனது தாய் மற்றும் சகோதரர் கூலி வேலைக்கு செல்கின்றனர். எனது தந்தை கிராமிய நடனங்கள் ஆடி வந்தார். அந்த வழியில் நானும் கல்லூரியில் படிக்கும்போதே பறை இசை அடிக்க கற்றுக்கொண்டேன். தற்போது சாதனை முயற்சியாக பலகையில் அடிக்கப்பட்ட 2½ இன்ஞ் உயர ஆணிகள் மீது ஏறி நின்று 1¾ மணி நேரம் பறை அடித்தேன். இதை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளேன். அதை அவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள் என்றார்.

Next Story