விருதுநகருக்கான கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


விருதுநகருக்கான கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 9:39 AM IST (Updated: 5 Oct 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம், அதன் தலைவர் வைரவசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து, பூத் கமிட்டி அமைப்பாளர் சிவகுருநாதன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பால்பாண்டி, பாலசக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல்காந்தியை அவமதிக்கும் வகையில் நடந்த மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அமைப்பாளர், தெலுங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஆகிய நியமனங்கள் வழங்கிய காங்கிரஸ் மேலிடத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியில் 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் முடிக்கப்படாத மத்திய அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் காங்கிரஸ் நிர்வாகி ஜெராக்ஸ் மோகன் நன்றி கூறினார்.


Next Story