ஏற்காடு அடிவாரம் பகுதியில் தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்த குளியல் - காற்றில் பறந்த சமூக இடைவெளியால் கொரோனா தொற்று பரவும் அபாயம்


ஏற்காடு அடிவாரம் பகுதியில் தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்த குளியல் - காற்றில் பறந்த சமூக இடைவெளியால் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 5 Oct 2020 11:35 AM IST (Updated: 5 Oct 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு அடிவாரம் பகுதியில் தடுப்பணையில் பொதுமக்கள் ஆனந்த குளியல் போட்டனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பெய்த மழையால் மலை பகுதிகளில் ஆங்காங்கே தோன்றிய அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் கோம்பைக்காடு என்ற இடம் உள்ளது.

இங்கு ஏற்காடு அடிவாரத்தில் பெய்த மழைநீர் அங்குள்ள தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு குளிப்பதற்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியை கண்டு களிப்பதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சேலம், கன்னங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கோம்பைக்காடு தடுப்பணை பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் தடுப்பணையிலும், அங்குள்ள அருவியிலும் ஆனந்தமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள தடுப்பணையில் வாலிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்ததால் பொதுமக்கள் கோம்பைக்காடு பகுதிக்கு செல்ல கன்னங்குறிச்சி போலீசார் தடை விதித்தனர். இருந்தபோதிலும் ஏராளமானோர் மாற்று பாதை வழியாக கோம்பைக்காடு பகுதிக்கு சென்று அங்குள்ள தடுப்பணையில் குளித்தனர். அங்கு சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குளித்து மகிழ்ந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததை அங்கு வந்தவர்கள் உணரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அங்கேயே திறந்த வெளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக அங்கு கன்னங்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் கன்னங்குறிச்சி புதுஏரியிலும் தண்ணீர் நிரம்பி வழிவதால் அங்கு பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் புது ஏரியை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களை ஏரியில் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏரி முன்பு பொதுமக்கள் நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதை காண முடிந்தது.


Next Story