உடுப்பியில், விற்க முயன்ற ரூ.15 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் என்ஜினீயரிங் மாணவர் கைது


உடுப்பியில், விற்க முயன்ற ரூ.15 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் என்ஜினீயரிங் மாணவர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2020 3:09 AM IST (Updated: 6 Oct 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் விற்க முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு,

கர்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஆங்காங்கா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்ததாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உடுப்பி அருகே மணிப்பாலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் போதை மாத்திரைகளை விற்பவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிப்பால் போலீசார் ஷிம்ரா பாலத்தின் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

போதை மாத்திரைகள் விற்க முயற்சி

அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் பெயர் ஹிமன்சு ஜோஷி என்பதும், அவர் மணிப்பாலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் அந்த பாலத்தில் நின்று எம்.டி.எம்.ஏ. என்னும் போதை மாத்திரைகளை விற்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

என்ஜினீயரிங் மாணவர் கைது

இதையடுத்து மணிப்பால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 498 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ.14.94 லட்சம் ஆகும். இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாரிடம் இருந்து அவர் போதை மாத்திரைகளை வாங்கி வந்தார், அவருக்கு யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story