டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை சி.பி.ஐ. அதிகாரிகளின் காரை முற்றுகையிட்ட காங்கிரசார்


டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை சி.பி.ஐ. அதிகாரிகளின் காரை முற்றுகையிட்ட காங்கிரசார்
x
தினத்தந்தி 5 Oct 2020 9:54 PM GMT (Updated: 5 Oct 2020 9:54 PM GMT)

டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தியதை கண்டித்து ராமநகர் அருகே சி.பி.ஐ. அதிகாரிகள் காரை காங்கிரசார் முற்றுகையிட்டனர். மேலும் இந்த சோதனையை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீடு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள வீடு, டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.க்கு சொந்தமான டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை மனதில் வைத்தே டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மோடிக்கு எதிராக கோஷம்

இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் அனந்தராவ் சர்க்கிள், சதாசிவநகர், மவுரியா சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராகவும், விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாகவும் கூறி இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

அப்போது பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதுபோல ஹாசனில் பெங்களூரு-மங்களூரு சாலையில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்லாரி, ராய்ச்சூர், கலபுரகி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களிலும் டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். பல்லாரி, ராய்ச்சூரில் சாலையில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதிகாரிகள் கார் முற்றுகை

இதுபோல டி.கே.சிவக்குமாரின் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள வீட்டின் முன்பும் இளைஞர் காங்கிரசார் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தொட்டஆலதஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை நடத்திவிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் தாங்கள் வந்த காரில் புறப்பட்டு செல்ல முயன்றனர்.

அப்போது காரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்களும், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர். மேலும் காரின் முன்பு படுத்து உருண்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒட்டுமொத்தத்தில் டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

Next Story