உ.பி.யில் பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூர், மன்னார்குடியில் நடந்தது


உ.பி.யில் பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூர், மன்னார்குடியில் நடந்தது
x
தினத்தந்தி 6 Oct 2020 4:15 AM IST (Updated: 6 Oct 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர், மன்னார்குடியில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மாணவி சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தி.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதில் மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச மாநில அரசு உடனடியாக பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் திருவாரூர் அடியக்கமங்கலம் பகுதியில் த.மு.மு.க.-மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க கிளை தலைவர் காதர் பக்கீர் பாவா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் நவாஸ், பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சவூதி மண்டல நிர்வாகி ஹாஜா அலாவுதீன், மாவட்ட விளையாட்டு செயலாளர் சேக் அப்துல்லா, த.மு.மு.க. கிளை செயலாளர் ஹாஜா நஜிபுதீன், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் தாவூது நூருல்லா, கிளை பொருளாளர் அஸ்பர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி எல்.ஐ.சி. கிளை அலுவலக வாயிலில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு இந்தியாவிற்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஏசுதாஸ் தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சந்திரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தாமோதரன், எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த பிச்சைக்கண்ணு, லியாபி எல்.ஐ.சி முகவர் சங்கத்தை சேர்ந்த அம்மையப்பன், லிக்காய் முகவர் சங்கத்தை சேர்ந்த சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story