பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வழங்க தாமதம் சேலத்தில் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்
பயோ மெட்ரிக் முறையால் பொருட்கள் வழங்க தாமதம் ஏற்படுவதாக கூறி சேலத்தில் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சேலம்,
தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பயோ மெட்ரிக் கருவியில் ரேஷன்கார்டுதாரரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வினியோகம் நடக்கிறது. இணைய சேவை சரியாக கிடைக்காத நிலை ஏற்படுவதால், ஒவ்வொரு நபருக்கும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கைரேகை பதிவுக்கு நேரம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு நேற்று காலையில் அதிக அளவில் மக்கள் பொருட்கள் வாங்க திரண்டனர். ஆனால் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை சரியான முறையில் பதிவு ஆகாததால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொருட்கள் வாங்க முடியாததால் விரக்தி அடைந்த சிலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களில் சிலர் ரேஷன் கடை முன்பு திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயோ மெட்ரிக் நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது எனவும், இதனால் பொருட்களை வாங்க முடியவில்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர். திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல், இந்திரா நகர், அம்பாள் ஏரி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறைப்படி கைரேகை பதிவுக்கு கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story