கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள் - சமூக இடைவெளியை கடைபிடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதை பார்த்த கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் கடந்த 2 மாதமாக காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலில் வந்து டோக்கன் பெறும் 50 பேரிடம், கலெக்டர் காணொலி காட்சி மூலம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று வந்தார். மற்றவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமையான நேற்று மனு கொடுப்பதற்காக காலை 9 மணி முதலே ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்திருந்தனர். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன் மற்றும் போலீசார் பொதுமக்களை எச்சரித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே காலை 10.30 மணி அளவில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, காரில் அலுவலகம் வந்தார். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதை பார்த்ததும், அவர் காரில் இருந்து இறங்கினார்.
பின்னர் அவர், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டில் இருந்து வெளியே வந்தாலே முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். மனு கொடுப்பதற்காக யாரும் அதிகாலை முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்க வேண்டாம். நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டாலே, அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். தொடர்ந்து அவர் காரில் ஏறி, கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, இணையவழி மூலம் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 137 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. தொடர்ந்து இந்த கோரிக்கை மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story