திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 வீடுகள் எரிந்து நாசம்


திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:15 PM GMT (Updated: 6 Oct 2020 4:42 AM GMT)

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசமாயின.

திருச்சி, 

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரில் குடிசைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாசால் வேயப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் செல்வராஜ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு, செல்வராஜ் வீட்டில் இருந்து ‘டமார்‘ என்ற சத்தத்துடன் கரும்புகை வெளியேறியது. பின்னர் வீட்டில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

அதிகாலை என்பதால், பக்கத்து வீடுகளில் உள்ள அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீப்பிடித்து எரிவதை கண்ட சிலர் திடுக்கிட்டு எழுந்து அலறியடித்தபடி வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு சென்றனர். அந்த தீ மளமளவென பக்கத்து கூரை வீடுகளிலும் பரவி எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்ததும் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்கள், ஸ்ரீரங்கம், நவல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து தலா 1 வாகனம் என மொத்தம் 5 வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சி மாநகராட்சி லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ மேலும் பரவாமல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா (பொறுப்பு), உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், கண்டோன்மெண்ட் நிலைய அலுவலர் மெல்கியூராஜா ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டது.

சுமார் 2½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் செல்வராஜ், மாணிக்கம், நந்தினி, சம்பத், ராஜூ, சுகுமார், ஜெபமணி, சுமதி, பிரவீன்குமார் உள்பட 16 பேரின் வீடுகள் தீக்கிரையானது. தீ விபத்தில் வீடுகளில் இருந்த இரும்பு பீரோ, கட்டில், டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் சைக்கிள், மாணவ-மாணவிகளின் புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. சேத விவரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்து குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், பூட்டப்பட்டு இருந்த செல்வராஜ் வீட்டில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதாலும், மின்கசிவு காரணமாகவும் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனத்தினர் உதவி பொருட்கள் வழங்கினர். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர்லால் நேரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.

Next Story