திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு - கடத்தப்பட்ட கணவரை மீட்டு தரக்கோரி மனு
கடத்தப்பட்ட கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் முள்ளிப்பட்டியை அடுத்த வங்காரப்பட்டியை சேர்ந்தவர் ஜஹாங்கீர் என்கிற தாஸ். இவர் கருமண்டபத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர் சோபியா (வயது 36). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் ஜெனிபர் சோபியா, நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு தனது 3 குழந்தைகளுடன் வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஜெனிபர் சோபியா தீக்குளிப்பதற்காக பையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் பாய்ந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர்.
இதையடுத்து ஜெனிபர்சோபியா கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே தரையில் விழுந்து மயங்கினார். இதைக்கண்டு அவரது 3 குழந்தைகளும் அலறி துடித்தனர். உடனே அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியபோது ஜெனிபர் சோபியா கூறுகையில், எனது கணவர் வேலை பார்த்த அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக ஏராளமானோர் பணம் செலுத்திய நிலையில் அவர்களை வெளிநாடு அனுப்ப முடியாததால் சிலர் பணத்தை திரும்ப கேட்டு எனது கணவரை மிரட்டி வந்தனர். இதையடுத்து துவரங்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது சிலர் எனது கணவரை கடத்தி சென்றனர். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, கடத்தப்பட்ட எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து கலெக்டரை சந்திப்பதற்காக ஜெனிபர் சோபியாவை போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story