ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் - 2 பேர் கைது
சிவகாசி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலையை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
சிவகாசி,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் ரகசியமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் விஸ்வநத்தம் பகுதியில் உள்ள ஓரு குடோனில் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த குடோனுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த குடோனில் 18 மூடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்புரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த அய்யாதுரை (வயது 48), முருகேசன் (65) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இந்த புகையிலைகளை இங்கு வைக்க கூறிய மொத்த வியாபாரி ஒருவர், போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிரடி சோதனை நடத்தி ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசாரை, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் பாராட்டினார்.
Related Tags :
Next Story