க.பரமத்தி அருகே, சம்பள பணம் பிரிப்பதில் தகராறு; 2 பேருக்கு கத்திக்குத்து - வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு


க.பரமத்தி அருகே, சம்பள பணம் பிரிப்பதில் தகராறு; 2 பேருக்கு கத்திக்குத்து - வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 5:15 AM GMT (Updated: 6 Oct 2020 5:12 AM GMT)

க.பரமத்தி அருகே சம்பள பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

க. பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே விசுவநாதபுரியை சேர்ந்த வடிவேல் (வயது 40). இவர் கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சகாதேவன் (35). இருவரும் கரூரில் ஒன்றாக கடந்த இரண்டு மாதமாக சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் சம்பளம் பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகாதேவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேல் வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த வடிவேலுவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த வடிவேலின் உறவினர்கள் சகாதேவனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (37) என்பவரையும் சகாதேவன் கத்தியால் குத்தினார். இதையடுத்து காயமடைந்த சதீசும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து க. பரமத்தி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் க.பரமத்தி போலீசார் சகாதேவனை கைது செய்ய வந்தனர். அப்போது சகாதேவன் தலைமறைவானார். இதனையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சகாதேவனை பிடித்து தர்ம அடி கொடுத்ததால் அவரும் காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்களிடமிருந்து சகாதேவனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து க. பரமத்தி இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சகாதேவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story