முத்தண்ணன் குளக்கரையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை குடியிருப்புகளை இடிக்க கூடாது - அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு மனு
முத்தண்ணன் குளக்கரையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை குடியிருப்புகளை இடிக்க கூடாது என்று அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட் டது. அதன்பிறகும் பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்கள் தங்களின் மனுக்களை, அங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போட்டு விட்டு செல்லுமாறு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
கோவை முத்தண்ணன் குளக்கரையில் குமாரசாமி காலனியில் பல தலைமுறைகளாக ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே மாநகராட்சி சார்பில் இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், பருவமழை காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்றும், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு 4 வார காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும் இது தொடர்பான மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும் வரையும், பொது மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரையும் இந்த குடியிருப்புகளை இடிக்க கூடாது. மேலும் இந்த மக்களுக்கு மாற்று நிலம் அல்லது வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை அரசூரை சேர்ந்த மூதாட்டி சின்னக்கண்ணன் (வயது 75) வழங்கிய மனுவில், நான் மேற்கு அரசூர் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தேன். எனது நிலை கருதி அந்த இடத்திற்கு அரசு பட்டா வழங்கியது. மேலும் அரசு சார்பில் இலவச வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. அரசு எனக்கு வழங்கிய பட்டாவை எனது மகன் மற்றும் மருமகள் எடுத்துச் சென்று விட்டனர். தற்போது அந்த பட்டாவை தர மறுக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story