குன்னூரில் அறவழி போராட்டம்: நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை - காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவர் பேட்டி


குன்னூரில் அறவழி போராட்டம்: நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை - காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2020 11:01 AM IST (Updated: 6 Oct 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவர் சுதா பேட்டியின்போது கூறினார்.

ஊட்டி,

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குன்னூரில் காந்தி சிலை முன்பு நேற்று மாலை அறவழி போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவர் சுதா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸ் மகளிரணி மாநில தலைவர் சுதா நிருபர்களிடம் கூறும்போது, நாட்டில் நாளுக்குநாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்கு மாநில பா.ஜனதா அரசே காரணம். அந்த வழக்கில் 5 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல என்றார்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஊட்டியில் உள்ள காந்தி சிலை முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜாகீர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ரவி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம். ராகுல்காந்தியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.

Next Story