பன்றி பண்ணைகளை அப்புறப்படுத்தக்கோரி அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


பன்றி பண்ணைகளை அப்புறப்படுத்தக்கோரி அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Oct 2020 5:51 AM GMT (Updated: 6 Oct 2020 5:51 AM GMT)

சேவூர் அருகே பன்றி பண்ணைகளை அப்புறப்படுத்தக்கோரி அதிகாரிகளை பொது மக்கள் சிறைபிடித்தனர்.

சேவூர்,

சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சி வெள்ளமடை பகுதியில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் அருகில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, மர்ம காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல நீரோடையிலும், புறம்போக்கு நிலத்திலும் பன்றிக்கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் நிலைகளும், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, குடியிருப்புகளின் அருகில் பன்றி வளர்ப்பதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து பன்றி பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பன்றி பண்ணை அகற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரம் வெள்ளமடை, தத்தனூர் பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றிய தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களிடம் ஆர்.டி.ஓ. கவிதா, அவினாசி தாசில்தார் சாந்தி, ஒன்றிய ஆணையாளர் அரிகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக பன்றி பண்ணை அகற்றப்படும். மேலும் பன்றி பண்ணைக்கு சீல் வைக்கப்படும் என மதியம் 12.30 மணிக்கு எழுத்துப்பூர்வமாக பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பன்றிகள் 7 நாட்களில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை சிறைபிடித்தனர். இறுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) பன்றிகளை அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் நேற்றுகாலை முதல் இரவு வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story