தசரா விழாவையொட்டி அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை


தசரா விழாவையொட்டி அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை
x
தினத்தந்தி 7 Oct 2020 3:00 AM IST (Updated: 7 Oct 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மகாராணி பிரமோதா தேவி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது முக்கிய நிகழ்ச்சிகளான ஜம்பு சவாரி ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகளை தவிர்த்து பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்பு சவாரி ஊர்வலமும் அரண்மனை வளாகத்திலேயே நடத்தப்படுகிறது. அத்துடன் தசராவை முன்னிட்டு அரண்மனையில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் வழக்கம்போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மகாராணி அறிக்கை

ஆனால் கொரோனா பரவல் காரணமாக மைசூரு அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைசூரு அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மைசூரு தசரா விழா எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுபோல் அரண்மனையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் சம்பிரதாய சடங்குகளும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் அர்ச்சகர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.

எனவே, அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களது குடும்பத்தினர் யாரும் இதில் பங்கேற்க மாட்டார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story