என்னை துரதிர்ஷ்டசாலி என்பதா? பிரசாந்த் சம்பரகிக்கு, குசுமா கண்டனம்


என்னை துரதிர்ஷ்டசாலி என்பதா? பிரசாந்த் சம்பரகிக்கு, குசுமா கண்டனம்
x
தினத்தந்தி 7 Oct 2020 3:11 AM IST (Updated: 7 Oct 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

தன்னை துரதிர்ஷ்டசாலி என்று கூறிய பிரசாந்த் சம்பரகிக்கு, மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா கடந்த 2 நாட்களுக்கு முன்பு, டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான பிரசாந்த் சம்பரகி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குசுமாவின் தலையில் டி.கே.சிவக்குமார் கை வைத்து ஆசிர்வாதம் தெரிவித்தார். இதன்மூலம் குசுமாவின் துரதிர்ஷ்டம் டி.கே.ரவியிடம் இருந்து டி.கே.சிவக்குமாருக்கு மாறி உள்ளது. குசுமா வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதாவது டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடந்ததை மனதில் வைத்தே, பிரசாந்த் சம்பரகி இவ்வாறு கருத்து பதிவு செய்து இருந்தார்.

நல்லது செய்யட்டும்

தன்னை துரதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ள பிரசாந்த் சம்பரகிக்கு, குசுமா கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை துரதிர்ஷ்டசாலி என்று பிரசாந்த் சம்பரகி கூறியுள்ளார். வேறொருவரின் வாழ்க்கையை பற்றி பேசுவது உங்கள் (பிரசாந்த் சம்பரகி) கண்ணியத்திற்கு நல்லதல்ல. பல மாதங்களாக நீங்கள் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போராடி வருவது போற்றத்தக்கது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்கும் இளைஞரே உங்களுக்கு வாழ்த்துகள். மற்றொருவரின் வாழ்க்கையை நீங்கள் திரும்பி பார்க்க வேண்டாம் என்பதே எனது எண்ணம். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் உள்ளன.

எனது நிலையில் உங்கள் சகோதரி இருந்தால் இப்படி தான் பேசுவீர்களா? பெண்கள் மட்டுமே கேலி, இன்னல்களுக்கு ஆளாக வேண்டுமா? ஹத்ராசில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியவில்லையா?. கடவுள் உங்களுக்கு நல்லது செய்யட்டும்.

இவ்வாறு குசுமா கூறியுள்ளார்.

Next Story