நிலுவை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி


நிலுவை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 7 Oct 2020 3:24 AM IST (Updated: 7 Oct 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவர்கள் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அங்கன்வாடி ஊழியர்களில் ஒரு பிரிவினர் நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்தனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகம் அருகிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

அமைச்சர் வீடு முற்றுகை

பின்னர் அவர்கள் உப்பளம் சாலையில் உள்ள அமைச்சர் கந்தசாமியின் வீட்டை இரவில் முற்றுகையிட்டனர். அங்கு அவர்கள் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கன்வாடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து புதுச்சேரி பூர்விக ஆதிதிராவிடர் அரசு அலுவலர் நல சங்க தலைவர் ராமலிங்கம் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் அமைச்சர் கந்தசாமி, தங்களின் கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் கவர்னரிடம் தான் உள்ளது. கவர்னர், தலைமை செயலர், நிதித்துறை செயலாளர் கையெழுத்திட்டால் உடனடியாக உங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கப்படும். எனவே இது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுங்கள் என்று கூறினார். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்துசென்றனர். இன்று (புதன் கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story