தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 5:24 AM IST (Updated: 7 Oct 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்காசி,

நகரப்பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு முறையும் கிராமப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடமாறுதல் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. இதன்படி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். தற்போது பிற மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெற்று விட்டது. ஆனால் தென்காசியில் மட்டும் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற வேண்டிய இந்த கலந்தாய்வு தற்போது வரை நடைபெறவில்லை.

போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலை 6 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், உதவி கலெக்டர் பழனிக்குமாரை நேரில் சந்தித்து இதுகுறித்து கூறினார்கள். அவர் இதற்கு பதில் ஏதும் கூறாமல் மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அனைவரும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோம பாண்டியன், பொருளாளர் திருப்பதி, துணைத்தலைவர் ஆறுமுகம், துணைச் செயலாளர் ராம்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் செல்ல முருகன், மாவட்ட பிரச்சார செயலாளர் விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி கலெக்டர் பழனிக்குமார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கலெக்டரின் கவனத்துக்கு இப்பிரச்சனையை தெரியப்படுத்தி உள்ளோம். ஒருவாரத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என சங்க மாவட்ட பிரசார செயலாளர் விநாயகம் தெரிவித்தார்.

Next Story