சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணி - கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்
சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாகரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் ரெங்கராஜன், சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் சுதாகர் வரவேற்று பேசினார்.
நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நிம்மேலி கிராமத்தில் பனை விதை நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் சீர்காழி நகராட்சி மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நமது அடையாள சின்னம் பனை மரம், இதற்கான அங்கீகாரம் 1978-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 20 லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக நிம்மேலியில் நலம் விவசாய அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சம் பனை விதை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கஜா புயலின் போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளன. மாவட்டம் முழுவதும் நாவல், புங்கன் போன்ற நாட்டு மரங்கள் நடப்பட உள்ளன.
தற்போது பருவ காலம் தொடங்கி உள்ளதால் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு மரக்கன்றுகளை நடவேண்டும் மூன்று மாதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 80 சதவீத மரக்கன்றுகள் வளர்ந்துவிடும். சம்பா நடவு பணிகள் 68 ஆயிரம் எக்டேரில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எக்டேரில் நடவு பணி இருக்கும். தற்போது மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினையும் நாகை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், விஜயலட்சுமி, தாசில்தார் ரமாதேவி, ரோட்டரி சங்க செயலாளர் சண்முகம், முன்னாள் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், வக்கீல் சுந்தரய்யா, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், விவசாயி கரு.முத்து நன்றி கூறினார்.
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி தலைவர் முருகவேல் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியத்துக்குட்பட்ட நீர்முளை, பிரிஞ்சுமூலை, திருமாளம், சந்தானதெரு, ஏகராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நட்டனர். இதில் தலைஞாயிறு மேற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், நகர தலைவர் பிரபாகரன், ஒன்றிய தலைவர் திருமுருகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story