100 நாள் வேலையை பேரூராட்சி பகுதியிலும் விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கஞ்சிகலயத்தை உடைத்து ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலையை பேரூராட்சி பகுதியிலும் விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கஞ்சிகலயத்தை உடைத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2020 10:15 PM GMT (Updated: 7 Oct 2020 2:54 AM GMT)

100 நாள் வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கஞ்சிகலயத்தை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

100 நாள் வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கஞ்சிகலயத்தை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஜோசப், மாதர் சங்க தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கஞ்சிகலயங்களை உடைத்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் பேரளத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கஞ்சி கலயத்தை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாரியம்மாள், மாவட்டக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் மணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் லிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பி கஞ்சி கலயங்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

குடவாசல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குடவாசல் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குடவாசல் ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி தலைவர் சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கெரக்கொறியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் 100 வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.

கொரடாச்சேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கஞ்சி கலயம் உடைப்பு போராட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மருதையன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ரெங்கசாமி, கல்யாணசுந்தரம், பக்கிரியம்மாள், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மணியன் கலந்துகொண்டு கஞ்சி கலயத்தை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய பொருளாளர் கோபிராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சண்முகம், சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் குமாரராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேட்டை ஜெயராமன், பன்னீர்செல்வம், நாச்சிக்குளம் கோதண்டபாணி, வெள்ளாதிக்காடு காசிநாதன், சிறுபான்மை பிரிவு ரஹீம் உள்பட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்த மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜிடம் போராட்ட குழுவினர் வழங்கினர்.

Next Story