மாவட்ட செய்திகள்

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வரித்தண்டலர் கைது - திருவண்ணாமலையில் பரபரப்பு + "||" + For property tax name change Tax collector arrested for taking bribe - Excitement in Thiruvannamalai

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வரித்தண்டலர் கைது - திருவண்ணாமலையில் பரபரப்பு

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வரித்தண்டலர் கைது - திருவண்ணாமலையில் பரபரப்பு
சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வரித்தண்டலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பட்டாபிராமன். இவரது தந்தை பார்த்தசாரதி, சமீபத்தில் இறந்து விட்டார். பார்த்தசாரதிக்கு சொந்தமாக திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கான சொத்துவரி தொடர்பான பெயர் மாற்றத்திற்கு திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை பட்டாபிராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணுகி உள்ளார்.

அப்போது திருவண்ணாமலை நகராட்சி வரித்தண்டலர் விக்கிரமன் என்பவர் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத பட்டாபிராமன் அது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின்பேரில் ரூ.3 ஆயிரத்து 500-ஐ கொடுப்பதாக விக்கிரமனிடம் பட்டாபிராமன் கூறியுள்ளார். அதை தொடர்ந்து பணத்தை எடுத்து கொண்டு 6-ந் தேதி திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்திற்கு வருமாறு பட்டாபிராமனிடம், விக்ரமன் கூறினார்.

இந்த தகவலை பட்டாபிராமன் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாரிடம் உடனடியாக தெரிவித்தார். போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி மாறுவேடத்தில் கண்காணித்தனர். பட்டாபிராமனிடமிருந்து விக்ரமன்(வயது 31) பணத்தை வாங்கியபோது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விக்ரமனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.